காங்கிரஸ் கட்சி தலைவர்களை விமர்சிக்கும் பி.கே.ஹரிபிரசாத் மீது கடும் நடவடிக்கை
|காங்கிரஸ் கட்சி தலைவர்களை விமர்சிக்கும் பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி. மீது கட்சி மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நஞ்சேகவுடா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
மாலூர்
பி.கே.ஹரிபிரசாத்
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தியில் நேற்று தொகுதி எம்.எல்.ஏ. நஞ்சேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தேசிய பொது செயலாளரும், தற்போதைய எம்.எல்.சி.யுமான பி.கே.ஹரிபிரசாத் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
அவர் கூறியிருக்கும் கருத்துகள் மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அனைத்து பொறுப்புகளையும் அனுபவித்தவர் பி.கே. ஹரிபிரசாத். அகில இந்திய காங்கிரஸ் கட்சி அவருக்கு பல்வேறு பதவிகள் கொடுத்துள்ளது.
கடும் நடவடிக்கை
ஆனால், தற்போது துணை முதல்-மந்திரி குறித்து தேவையின்றி பேசி வருவது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் மனசாட்சி இன்றி செயல்படுகிறார்கள் என்று அவர் கூறுவது கண்டிக்கத்தக்கது. இதனால், அவர் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக தோன்றுகிறது.
சித்தராமையா, டி.கே.சிவக்குமார், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் தீவிர போராட்டத்திற்கு பின் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.
மேற்கண்ட தலைவர்களை காட்டிலும் பி.கே.ஹரிபிரசாத் பெரிய தலைவர் இல்லை. காங்கிரஸ் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ள பி.கே. ஹரிபிரசாத் மீது கர்நாடக காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.