அரியானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு நெருக்கடி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னரிடம் கோரிக்கை
|நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி அரியானா கவர்னருக்கு துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதியுள்ளார்.
சண்டிகர்,
அரியானா மாநிலத்தில், முதல்-மந்திரி நயாப்சிங் சைனி தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சி செய்து வருகிறது. 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையில், தற்போது 88 உறுப்பினர்களே உள்ளனர். பா.ஜனதாவுக்கு 40 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சைகள் மற்றும் லோக்தளம் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
பா.ஜனதாவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக ஜனதா கட்சி கடந்த மார்ச் மாதம் வாபஸ் பெற்றது. இதையடுத்து 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சோம்பிர் சங்வான், ரந்திர் சிங் கோலன், தரம்பால் கோண்டர் ஆகியோர் பா.ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதனால், அரியானா பா.ஜனதா அரசுக்கு அறுதிப்பெரும்பான்மைக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இதனிடையே பா.ஜ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உதவ தயாராக இருப்பதாக ஜனநாயக ஜனதா தளம் கட்சி அறிவித்தது.
இந்த நிலையில் அரியானா சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி அம்மாநில கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு ஜனநாயக ஜனதா தளம் கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரியானாவில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகியிருப்பதாகவும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் அரியானாவில் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி நயாப்சிங் சைனி, அரியானாவில் பா.ஜனதா ஆட்சிக்கு சிக்கல் இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.