'கிரிமியா ஆக்கிரமிப்பில் இந்தியாவிற்கு படிப்பினை உள்ளது' - உக்ரைன் மந்திரி பேச்சு
|இந்தியாவுடன் புதிய உறவைத் தொடங்க விரும்புவதாக உக்ரைன் மந்திரி எமின் தபரோவா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் துணை வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா, 4 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில், அவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு வந்துள்ள எமின் தபரோவா இன்று மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக மீனாட்சி லேகி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் 'உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில்' சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எமின் தபரோவா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நான் இந்தியாவுக்கு ஒரு செய்தியுடன் வந்திருக்கிறேன். இந்தியாவும் உக்ரைனும் நெருக்கமான உறவை பின்பற்ற வேண்டும் என உக்ரைன் அரசு விரும்புகிறது. நமது உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆனால் இந்தியாவுடன் புதிய உறவைத் தொடங்க விரும்புகிறோம்.
சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா கடினமான அண்டை நாட்டு உறவை கொண்டுள்ளது. கிரிமியா ஆக்கிரமிப்பில் இந்தியாவிற்கும் ஒரு படிப்பினை உள்ளது. தவறுகளை தடுக்காவிட்டால் அது மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிடும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.