< Back
தேசிய செய்திகள்
தண்டவாளத்தில் விரிசல்; சிவப்பு துணியை காட்டி சென்னை ரெயிலை நிறுத்திய தொழிலாளி - பெரும் விபத்து தவிர்ப்பு
தேசிய செய்திகள்

தண்டவாளத்தில் விரிசல்; சிவப்பு துணியை காட்டி சென்னை ரெயிலை நிறுத்திய தொழிலாளி - பெரும் விபத்து தவிர்ப்பு

தினத்தந்தி
|
28 Oct 2022 4:55 AM IST

என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருப்பதி,

திருப்பதி மாவட்டம் சூரப்பகாசம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ரேணிகுண்டாவை அடுத்த புடி ரெயில் நிலையம் அருகில் தண்டவாளம் ஓரம் ஓட்டிச்சென்றார்.

அப்போது அவர், ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததைக் கண்டார். சற்று நேரத்தில் மும்பையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக வந்தது. உடனே அவர், சிவப்பு நிறத்துணியை காட்டியவாறு தண்டவாளத்தில் ஓடினார்.

இதைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர், ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக கருதி உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரவிசங்கரின் செயலால் சென்னை ரெயில் தப்பியது. ரெயிலில் இருந்து கீழே இறங்கிய என்ஜின் டிரைவர், மாடு மேய்க்கும் தொழிலாளி ரவிசங்கருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து புடி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்டு இருந்த விரிசலை சரி செய்தனர். அதன் பிறகு சென்னையை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச்சென்றது. அதைத்தொடர்ந்து அந்த வழியாகச் சென்ற அனைத்து ரெயில்களும் விரிசல் ஏற்பட்ட இடத்தில் மெதுவாக சென்றன.

மேலும் செய்திகள்