< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய கவர்னர் உத்தரவு - சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்!
தேசிய செய்திகள்

கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய கவர்னர் உத்தரவு - சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்!

தினத்தந்தி
|
24 Oct 2022 2:21 PM IST

கேரள கவர்னர் ஆரிப் கான் பிறப்பித்த உத்தரவுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பல்கலைக்கழக வேந்தர் மகாதேவன் பிள்ளையால் நியமிக்கப்பட்ட 15 செனட் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், கவர்னரின் இறுதி எச்சரிக்கையை துணைவேந்தர் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, ராஜ்பவனே ஒரு அசாதாரண நடவடிக்கையாக 15 உறுப்பினர்களை செனட்டில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தது மற்றும் இதற்கான உத்தரவு அரசிதழும் வெளியிடப்பட்டது. உத்தரவின் நகல்கள் துணைவேந்தர் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவுக்கு செனட் கூட்டத்தை நடத்தவும், செனட்டின் பரிந்துரையாளரை வழங்கவும் கவர்னர் பலமுறை உத்தரவிட்டும் கவனிக்கப்படாமல் போனதால், கவர்னர் இந்த அசாதாரண நடவடிக்கையை எடுத்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.

முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வி.மகாதேவன் பிள்ளை, செனட் உறுப்பினர்களை நீக்கியதில் சில விதிமீறல்கள் இருப்பதாகவும், செனட் உறுப்பினர்களை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் பல்கலைக்கழக வேந்தரான கவர்னரிடம் தெரிவித்தார்.

கவர்னர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற வகையில், கேரள பல்கலைக்கழகத்தின் செனட்டில் இருந்து 15 உறுப்பினர்களை நீக்கினார். வேந்தரால் பரிந்துரைக்கப்பட்ட 15 உறுப்பினர்கள் செனட் உறுப்பினர்களாக நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்று கேரள பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கவர்னர் கடிதம் எழுதினார். 15 பேரில், ஐந்து பேர் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆவார்கள்.

தற்போது கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை இன்று காலை 11.30 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் கான் உத்தரவிட்டு உள்ளார்.இதற்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், கேரள கவர்னர் ஆரிப் கான் பிறப்பித்த உத்தரவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:-

அப்படி உத்தரவிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. இது தன்னிச்சையானது, இது சட்டவிரோதமானது, இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவர்கள் கேரளாவின் உயர்கல்வி முறையை கட்டுப்படுத்தவும் அழிக்கவும் விரும்புகிறார்கள்.

அவர்கள் அங்கு ஆர்எஸ்எஸ் ஊழியர்களை நியமித்து உயர்கல்வி முறையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அதன்மூலம், கல்வி நிறுவனங்களில் இந்துத்துவா சித்தாந்தத்தைப் பரப்ப முடியும். அத்தகைய உத்தரவை கவர்னர் பிறப்பிக்க அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து கோர்ட்டில் முறையிட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்