கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
|கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
உலகையே உலுக்கிய கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முக்கியமானது. இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வினியோகம் செய்தது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் போட்டுக்கொண்டனர்.
இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்து உள்ளது. அதாவது அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் அது தொடர்பான விளைவுகளை உருவாக்கும் என இங்கிலாந்து கோர்ட்டில் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.
இது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். இந்த மருந்தை இந்தியாவில் அனுமதித்ததற்காக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் சாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டை எட்டியுள்ளது. இது தொடர்பாக விஷால் திவாரி என்ற வக்கீல் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அதில் அவர், கோவிஷீல்டு தடுப்பூசியை பரிசோதிக்கவும், அதன் பக்க விளைவுகள் மற்றும் அபாய காரணிகளை ஆய்வு செய்யவும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் எந்த தனிநபரும் அல்லது நிறுவனமும் இந்த தடுப்பூசி விற்பனை மற்றும் வினியோகம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதைப்போல இந்த தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
அனைத்து தரப்பினரிடமும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என தெரிகிறது.