நம்மை நவீனமாக்க கற்றுக்கொடுத்தது கொரோனா- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
|நம்மை மாற்றிக்கொள்ளவும், நவீனமாக்கவும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கற்றுக்கொடுத்தது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் கூறினார்.
கற்றுக்கொடுத்த கொரோனா
ஒடிசாவில் 30 மாவட்டங்களில் காகிதமில்லா கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை டெல்லியில் இருந்தவாறு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசியபோது கூறியதாவது:-
தொழில் நுட்ப முன்னேற்றத்தால் பல நன்மைகள் இருக்கின்றன. இன்றைக்கு நாட்டின் கடைக்கோடி பகுதியில் உள்ள ஒரு சாமானிய மனிதர்கூட நீதி வழங்கும் அமைப்பை நாடுவதற்கு முடியும்.
நம்மை மாற்றிக்கொள்ளவும், நவீனமயமாக்கிக்கொள்ளவும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கற்றுக்கொடுத்துள்ளது. தொழில்நுட்பத்தின் நன்மைகள் நமக்கு சாட்சியாக மட்டுமல்லாமல், நமது வாழ்க்கை முறையை ஒருங்கிணைக்கவும் உள்ளன. எந்த ஒரு குறிப்புக்காகவும் நூலகத்தையும், அச்சிட்ட புத்தகத்தையும் தேடிச்செல்கிற சமூக சூழலில்தான் நான் வளர்ந்தேன்.
இப்போதும் தொழில் நுட்பத்தைப் பொறுத்தமட்டில் நான் சர்சரி பள்ளியில் இருப்பதாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
'கடினமானது அல்ல'
இந்த விழாவில் முன்னிலை வகித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசும்போது, " தொழில்நுட்பம் உயர்வுக்கானது மட்டுமல்ல, நீதி வழங்குவோருக்கும் உரியது. காகிதமில்லா கோர்ட்டுகள், வக்கீல்களின் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும். இது சுற்றுச்சூழலிலும் தாக்குப்பிடிக்கக்கூடியதாகும். ஏனென்றால் அவை காகிதப் பயன்பாட்டை குறைத்து விடும்" என குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, "நம்மில் பலருக்கும் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதில் பழக்கம் இல்லை, எனவே கோர்ட்டு நடவடிக்கைகளை பின்பற்றுவது அசவுகரியமானது என பலரும் கருதுகிறோம். நானும் இந்தப் பிரிவில் ஒருவனாகத்தான் இருந்தேன். ஆனால் இப்போது தொழில்நுட்பத்துக்கு ஒருவர் பழகுவது என்பது நாம் ஆரம்பத்தில் நினைத்துபோன்று கடினமானது அல்ல என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.
'பயன்படுத்த வேண்டும்'
முன்னிலை வகித்த சுப்ரீம் கோர்ட்டின் மற்றொரு நீதிபதியான எம்.ஆர்.ஷா பேசும்போது, "காகிதமில்லா தகவல் பரிமாற்றம், மலிவானது. செலவினத்தை குறைக்கும். கோர்ட்டுகளில் அனைத்து தரப்பினரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.