பெங்களூருவுக்கு தனியாக வழிகாட்டுதல் நெறிமுறைகள்; கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் புத்தாண்டை கொண்டாட கட்டுப்பாடுகள்
|கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கர்நாடக அரசு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளது. இதுதொடர்பாக இன்று( அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவிக்க உள்ளது.
பஸ், மெட்ரோவில் முககவசம்
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனாவில் தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நமது நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தை பொறுத்தவரை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறையின் உத்தரவின்பேரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தது.
அப்போது முககவசம் அணியவும், பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உள்அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் போது முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் உத்தரவின் பேரில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பெலகாவியில் இன்று ஆலோசனை
அத்துடன் கொரோனா பரவல் பீதியால் அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில்களில் பயணிப்போர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா பரவல் ஏற்படும் அச்சமும் உருவாகி உள்ளது. இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெலகாவியில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடைபெற உள்ளது.
அதாவது பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், அங்குள்ள சுவர்ணசவுதாவில் வைத்து வருவாய்த்துறை மந்திரி அசோக் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
கட்டாயமாக முககவசம் அணிவது...
கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து முக்கியமாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக முககவசம் அணிவதை கட்டாயமாக்குவது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் மத்திய சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைப்பது குறித்தும் தீர்மானிக்கப்பட உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக புத்தாண்டை கொண்டாடுவதற்கு பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் மக்கள் தயாராகி வருகிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் ஒரேஇடத்தில் கூடுவார்கள் என்பதால், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து மந்திரிகள் அசோக், சுதாகர் முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.
தனியாக வழிகாட்டு நெறிமுறைகள்
குறிப்பாக பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர். பெங்களூருவை போன்று மைசூரு, மங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்கள், சுற்றுலா தளங்களில் எந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது குறித்தும் மந்திரிகள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
பெங்களூரு உள்பட மாநிலத்தில் தற்போது 10 முதல் 20 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் பிறப்பிக்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் மக்களுக்கும், வியாபாரிகள், ஓட்டல்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் கொரோனா பரவலை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து இன்று அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேவையான நடவடிக்கைகள்
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. விமான நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெலகாவியில் நாளை (அதாவது இன்று) மந்திரி அசோக்கும், நானும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.
அந்த கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், புத்தாண்டுக்கு என்று தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். பெங்களூருவுக்கு தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.