மாணவி ஆபாச வீடியோ வழக்கு கல்லூரி நிர்வாகிக்கு ஜாமீன்-கோர்ட்டு உத்தரவு
|உடுப்பி கல்லூரியில் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கில் மாணவிகளை தொடர்ந்து கல்லூரி நிர்வாகிக்கு உடுப்பி கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
உடுப்பி:-
ஆபாச வீடியோ வழக்கு
உடுப்பி அம்பலபாடி பகுதியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் 3 பேர் கழிவறையில் செல்போன் கேமரா வைத்து சகமாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு குறித்து மல்பே இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையிலான போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கில் போலீசார் சரியான விசாரணை நடத்தவில்லை என்று மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.மேலும் மாணவிகளை தப்ப வைக்க முயற்சி நடப்பதாகவும் மாணவிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதேபோல பா.ஜனதா தரப்பிலும் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 3 மாணவிகளுக்கு நேற்று முன்தினம் உடுப்பி மாவட்ட கோர்ட்டில் ஜாமீன் வழங்கியது.
கல்லூரி நிர்வாகிக்கு ஜாமீன்
இந்தநிலையில் இந்த வழக்கில் 4-வது குற்றவாளியாக கல்லூரி நிர்வாகத்தை போலீசார் சேர்த்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகியை கைது செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த கல்லூரி நிர்வாகம் தரப்பில் சம்பந்தப்பட்ட நிர்வாகிக்கு ஜாமீன் கேட்டு உடுப்பி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று இந்த மனு மீதான விசாரணை கோர்ட்டில் நடந்தது. இதில் கல்லூரி நிர்வாகம் சார்பில் ரஷ்மி கிருஷ்ணபிரசாத் ஆஜராகினார். அப்போது அவர் மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறினார். இதைகேட்ட நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் போலீசார் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று நீதிபதி கூறினார்.