நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம்.. கோர்ட் அனுமதி
|சம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு, நாளை மறுநாள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
ராஞ்சி:
சுரங்க முறைகேடு வழக்கில் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. கடந்த புதன்கிழமை நடந்த விசாரணைக்கு பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததால், புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். அவர் தலைமையிலான புதிய அரசு, நாளை மறுநாள் (பிப்ரவரி 5) சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
இந்நிலையில், சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.
ஹேமந்த் சோரனின் மனுவுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக அட்வகேட் ஜெனரல் ராஜீவ் ரஞ்சன் கூறினார்.
'' விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் நோக்கம் அல்ல. மாறாக ஒரு புதிய அரசு அமைப்பதைத் தடுப்பது அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதே அவர்களின் நோக்கம். ஹேமந்த் சோரன் விசாரணையில் தலையிடாதபோது சட்டசபை செயல்பாடுகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்தோம். எனவே எங்களின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது,'' என்றும் அவர் தெரிவித்தார்.