மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம்
|மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குடகு-
மடிகேரியில் கியாஸ் சிலிண்டர் ெவடித்து தம்பதி படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கியாஸ் சிலிண்டர் வெடித்தது
குடகு மாவட்டம் மடிகேரி டவுன் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரூபா. கியாஸ் அடுப்பு மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் ரமேஷ், சுண்டிகொப்பா அருகே தொண்டூரில் ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். அங்கு 30-க்கும் மேற்பட்ட முதியோர் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேசின் வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பு பழுதானதாக தெரிகிறது. இதனால் ரமேஷ், இரவில் கியாஸ் அடுப்பில் பழுது பார்த்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
தம்பதி படுகாயம்
இதில் ரமேஷ், அவரது மனைவி ரூபா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். ரமேசின் தந்தை கரியப்பா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள், மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்களது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.