பொருளாதார சீர்திருத்தங்களுக்காக மன்மோகன் சிங்கிற்கு இந்தியா கடன்பட்டுள்ளது - நிதின் கட்கரி புகழாரம்
|முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்களுக்காக இந்தியா அவருக்கு கடன்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் டேக்ஸ் இந்தியா ஆன்லைன் சார்பில் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த 1991-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார சீர்திருத்ததை தொடங்கி வைத்து, தாராளமயமாக்கல் கொள்கையை இந்தியாவுக்கு கொண்டு வந்தது புதிய பாதையை காட்டினார்.
இந்தியாவில் ஏழை மக்களுக்கு பலனளிக்கும் நோக்கத்துடன் தாராள பொருளாதார கொள்கை தேவை. கடந்த 1990 களின் நடுப்பகுதியில் மராட்டிய மாநில மந்திரியாக இருந்தபோது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கினால் தொடங்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக மராட்டியத்தில் சாலைகள் அமைக்க பணம் திரட்ட முடிந்தது.
தாராளமய கொள்கை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் என்பதற்கு சீனா ஒரு சிறந்த உதாரணமாகும். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த, இந்தியாவுக்கு அதிக முதலீடு தேவைப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.