< Back
தேசிய செய்திகள்
கொழுந்தியாளுடன் கள்ளக்காதல்: மருந்து விற்பனை பிரதிநிதி கல்லால் அடித்துக்கொலை - பெங்களூருவில் பரபரப்பு
தேசிய செய்திகள்

கொழுந்தியாளுடன் கள்ளக்காதல்: மருந்து விற்பனை பிரதிநிதி கல்லால் அடித்துக்கொலை - பெங்களூருவில் பரபரப்பு

தினத்தந்தி
|
2 May 2024 9:31 AM IST

மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் மருந்து விற்பனை பிரதிநிதியை கணவன் அடித்துக்கொலை செய்த கொடூர சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகாவை சேர்ந்தவர் ரவி குமார்(வயது 45). மருந்து விற்பனை பிரதிநிதியான இவருக்கும், கலபுரகியை சேர்ந்த பெண்ணுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவிக்கு நீலம்மா என்ற சகோதரி உள்ளார். அவரது கணவர் விஜய்குமார்(தொழிலாளி) ஆவார். ரவிகுமாருக்கும், அவரது கொழுந்தியாள் நீலம்மாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பின்னர் யாரும் இல்லாத சமயத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதுகுறித்து நீலம்மாவின் கணவர் விஜய்குமாருக்கு தெரியவந்தது. உடனே அவர் ரவிகுமார் மற்றும் தனது மனைவியை கண்டித்துள்ளார். எனினும் அவர்கள் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளனர். இதுதொடர்பாக விஜய்குமார் தனது மனைவியிடம் கேட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை ரவிகுமார் கைவிடாததால், அவரை கொலை செய்த விஜய்குமார் திட்டமிட்டார்.

அதன்படி சம்பவத்தன்று விஜய்குமார் தனது மனைவி மற்றும் ரவிகுமார் ஆகியோரை காரில் அழைத்து சென்றார். அவர்களது கார் ஆலந்தா தாலுகா புறநகர் சாலையில் சென்றது. அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர் காரை நிறுத்தினார். மேலும் ரவிகுமார் மற்றும் தனது மனைவியிடம் கள்ளத்தொடர்பு குறித்து கேட்டு விஜய்குமார் வாக்குவாதம் செய்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் தரையில் கிடந்த கல்லை எடுத்து ரவிகுமாரை, விஜய் குமார் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ரவிகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது மனைவியையும் அவர் தாக்கினர். எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதையடுத்து ரவி குமாரின் உடலை தாங்கள் வந்த காரில் விஜய்குமார் வைத்தார். பின்னர் காருக்கு தீவைத்தார். இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்த ஆலந்தா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் காரை சோதனை செய்தனர். அப்போது ரவிகுமாரின் உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மனைவியின் மைத்துனரை, விஜய்குமார் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜய்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்