பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 3-ந்தேதி மந்திரி சபை கூட்டம்
|மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வரும் மார்ச் 3-ந்தேதி பிரதமர் மோடி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சாணக்யபுரி தூதரக வளாகத்தில் அமைந்துள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது.
அரசாங்கத்தின் நிர்வாகம், கொள்கை விவகாரங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அவ்வபோது மந்திரி சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடைபெறும் இந்த மந்திரி சபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.