உத்தர பிரதேசம்: "முன்பு ஆட்சி செய்த அரசுகளின் மரபணுவில் ஊழல் இருந்தது"- யோகி ஆதித்யநாத்
|இதற்கு முன் ஆட்சி செய்த அரசுகளின் மரபணுவில் ஊழல் இருந்ததாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டுக்கு முன்பு ஆட்சி செய்த கட்சிகளின் மரபணுக்களில் ஊழல் இருந்ததாக மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
ஜான்பூரில் பல்வேறு திட்டங்களுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் இன்று கலந்து கொண்டு யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "2017 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆட்சி செய்த அரசுகளின் மரபணுவில் ஊழல் இருந்தது. அப்போது அரசு திட்டங்களானது சொந்த ஒப்பந்ததாரர் மற்றும் உதவியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டன.
இன்று மாநிலத்தில் வசிப்பவர் வெளி மாநிலத்திற்கு செல்லும்போது, அவர் மரியாதையுடன் பார்க்கப்படுகிறார். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை அப்படி இல்லை.
வெளியே செல்ல சென்ற இளைஞர்கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 2012 முதல் 2017 வரை ஆட்சி செய்தது. முன்னதாக மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 2007 முதல் 2012 வரை ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.