கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஊழல்; அசாம் முதல்-மந்திரி மீது சிசோடியா கடுமையான குற்றச்சாட்டு
|கொரோனா பெருந்தொற்று காலத்தில் பி.பி.ஈ. உபகரணங்கள் வினியோகத்தில் ஊழல் என குற்றச்சாட்டு கூறிய மணீஷ் சிசோடியாவை அசாம் முதல்-மந்திரி கடுமையாக சாடியுள்ளார்.
கவுகாத்தி,
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா இன்று கூறும்போது, 2020ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அசாமில் சுகாதார மந்திரியாக இருந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, பி.பி.ஈ. உபகரணங்களுக்கான அரசு ஆர்டர்களை தனது மனைவிக்கும், மகனின் வர்த்தக நண்பர்களின் நிறுவனங்களுக்கும் வழங்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்-மந்திரி இதுபோன்ற ஊழலில் ஈடுபட்டு இருக்கிறார். அவரை பா.ஜ.க. சிறையில் தள்ளுமா? என கேட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அசாம் முதல்-மந்திரியாக தற்போது உள்ள பிஸ்வா சர்மா பதிலளித்து பேசினார்.
அவர் கூறும்போது, 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாடு முழுவதும் பெருந்தொற்று தீவிரமடைந்து இருந்தபோது, அசாமில் பி.பி.ஈ. உபகரணங்கள் எதுவும் இல்லை. உயிர்களை காப்பதற்காக எனது மனைவி தைரியமுடன் முன்வந்து 1,500 பி.பி.ஈ. உபகரணங்களை விலையின்றி, நன்கொடையாக அரசுக்கு வழங்கினார். அவர் ஒரு பைசா கூட அதற்காக வாங்கவில்லை என கூறியுள்ளார்.
ஆனால், அந்த தருணத்தில் சிசோடியா முற்றிலும் வேறு வகையாக நடந்து கொண்டார். டெல்லியில் சிக்கியிருந்த அசாம் மக்களுக்கு உதவிட கோரி நான் தொடர்பு கொண்டபோது, என்னுடைய பல தொலைபேசி அழைப்புகளை ஏற்காமல் நீங்கள் மறுத்து விட்டீர்கள்.
ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. டெல்லி பிரேத அறையில் இருந்து கொரோனா பாதித்த நபரின் உடலை பெற 7 நாட்கள் வரை நான் காத்திருக்க வேண்டியிருந்தது என கூறியுள்ளார்.
உங்களது சொற்பொழிவை நிறுத்தி கொள்ளுங்கள். உங்கள் மீது குற்ற அவதூறு வழக்கு தொடர்வேன். அதனை சந்திக்க தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். பிஸ்வா சர்மாவின் மனைவி ரின்கு பூயன் சர்மாவும் சிசோடியா குற்றச்சாட்டுக்கு டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.