கொரோனா, பில்லி, சூனிய அச்சம்: 2 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிய தாய்-மகள்
|ஆந்திர பிரதேசத்தில் கொரோனா, பில்லி, சூனியம் என பயந்து 2 ஆண்டுகளாக பகல் பொழுதில் தாய் மற்றும் மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்துள்ளனர்.
காக்கிநாடா,
ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா மாவட்டத்தில் கொய்யூரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சூரிபாபு. இவரது மனைவி மற்றும் மகள் இருவரும் கொரோனா பெருந்தொற்று பரவலை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கி கிடந்து உள்ளனர்.
கொரோனா, பில்லி, சூனியம் ஆகியவற்றுக்கு பயந்து கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இரண்டு பேரும் பகல் பொழுதில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இரவில் மட்டுமே இயற்கை அழைப்புக்காக வெளியே சென்று வந்துள்ளனர்.
குடும்ப தலைவரான சூரிபாபு இவர்களுக்கு தினமும் உணவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது மனைவிக்கு உடல்நலம் பாதித்து உள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த ஒரு வார காலத்தில் சூரிபாபுவையும் வெளியே போக விடாமல் அவர்கள் தடுத்துள்ளனர்.
இதனால், நிலைமை கைமீறி போகிறது என உணர்ந்த அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அவர்களிடம், சூரிபாபுவின் மகள், நான் எனது வீட்டில் இருக்கிறேன். உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை? என்று கேட்டுள்ளர். அதன்பின்பு, அதிகாரிகள் பேசி, சமரசப்படுத்தி அவர்களை வெளியே கொண்டு வந்து காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.