பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு; அறிவுறுத்தல் வெளியிட்ட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
|பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தல் வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் சமீப வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லியிலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. இதேபோன்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை வெளியிட்டு உள்ளது.
* அதில், மீண்டும் பயன்படுத்த கூடிய துணியால் ஆன அல்லது சர்ஜிக்கல் முக கவசங்களை பணியிடங்களில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
* முறையான தூய்மை மற்றும் அடிக்கடி சுகாதார விசயங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* அதுவும் அடிக்கடி தொட கூடிய பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
* தும்மல், இருமலின்போது உங்களுடைய மூக்கு மற்றும் வாய் உள்ளிட்டவற்றை முழங்கை அல்லது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு மூடி கொள்ளுங்கள்.
* தனிநபர் சுகாதாரம் பேணுங்கள். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் என்றும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
* சிற்றுண்டி உண்ணும் இடங்களில் ஒன்று கூடுவது தவிர்த்தல் வேண்டும். அலுவலகத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூட கூடாது.
* உடல்நிலை சரியில்லை என தெரிய வந்தவுடன், உடனடியாக, உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு பணியிடத்தில் இருந்து வெளியேறவும். அதுபோன்ற ஊழியர்கள், வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.