5வது மாடியில் இருந்து விழுந்த நாய்... சிறுமியின் உயிரை பறித்ததால் உரிமையாளர் கைது
|5வது மாடியில் இருந்து விழுந்த நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா பகுதியில் உள்ள சாலையில் 4 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 5-வது மாடியில் இருந்து திடீரென நாய் ஒன்று கீழே சென்று கொண்டிருந்த சிறுமி மீது விழுந்தது. இதில் சிறுமி பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமி மீது நாய் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நாயின் உரிமையாளர் மற்றும் 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் மீது பல வழக்குகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், "கடந்த 6ம் தேதி சாலையில் நடந்து சென்ற சிறுமியின் மீது 5வது மாடியில் இருந்து நாய் ஒன்று விழுந்தது. இதில் காயமடைந்த சிறுமி அதே நாளில் உயிரிழந்தார். முதலில் விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர் சிறுமி மீது நாய் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து நாயின் உரிமையாளரை கைது செய்து உள்ளோம். அவரிடம் நாய் எப்படி கீழே விழுந்தது. தானாக குதித்ததா? அல்லது தூக்கி எறியப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.