மணிப்பூர் கலவரம் குறித்து ஆய்வுசெய்ய அமித் ஷா வரவுள்ள நிலையில் மேலும் 5 பேர் உயிரிழப்பு.!
|கலவரம் குறித்து ஆய்வுசெய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்.
இம்பால்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு குகி என்ற பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே இரு வாரங்களுக்கு முன்பு இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. இதில் வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர்.
கலவரத்திற்கு அப்பாவி பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 230-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன என மணிப்பூர் முதல்-மந்திரி மே மாத முதல் வாரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறி இருந்தார்.
மேலும், வன்முறை சம்பவங்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளின் போது பாதுகாப்புப் படையினரால் இதுவரை 40 "பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார். இந்த சூழலில், அங்கு மேலும் புதிதாக வன்முறை வெடித்ததில் ஒரு போலீஸ்காரர் உட்பட குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
அதிநவீன ஆயுதங்களை ஏந்திய பயங்கரவாதிகள், செரோ மற்றும் சுகுனு பகுதியில் பல வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். மேலும், பல பகுதிகளில் புதிய வன்முறைகள் பதிவாகியுள்ளன.
இதனிடையே அமைதியையும் பேணுமாறும், இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்கு உழைக்குமாறும் அவர் மெய்தெய் மற்றும் குகி சமூக மக்களிடம் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.