< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் சரக்கு வாகனத்துடன் 2 டன் தக்காளி கடத்தல்
தேசிய செய்திகள்

பெங்களூருவில் சரக்கு வாகனத்துடன் 2 டன் தக்காளி கடத்தல்

தினத்தந்தி
|
11 July 2023 12:15 AM IST

விற்பனைக்காக கோலாருக்கு எடுத்து சென்றபோது காரில் வந்த மர்மகும்பல், சரக்கு வாகனத்துடன், 2 டன் தக்காளியையும் கடத்திய துணிகர சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு:

நாடு முழுவதும் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், சந்தைகளுக்கு காய்கறி வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் சில காய்கறியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி, ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவை திருடப்படும் சம்பவங்களால் அச்சமும் கொள்கின்றனர்.

கடந்த வாரம் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தரணி என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த ரூ.2½ லட்சம் மதிப்பிலான தக்காளியை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதனால் வியாபாரிகள் பலரும் தங்களிடம் உள்ள தக்காளியை பாதுகாக்க கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாவேரி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா என்ற வியாபாரி, தக்காளி திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தலைநகர் பெங்களூருவில் சரக்கு வாகனத்துடன் 2 டன் தக்காளி திருடப்பட்ட துணிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்தில் கோலாரில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெங்களூரு எலகங்கா அருகே ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு வாகனத்தை வழிமறித்தப்படி கார் ஒன்று வந்து நின்றது. அப்போது காரில் இருந்து இறங்கிய 3 பேர், தங்களின் கார் மீது சரக்கு வாகனம் உரசியதாக கூறி விவசாயி மற்றும் சரக்கு வாகன டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இறுதியாக சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மர்மநபர்கள் பறித்து கொண்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் தக்காளி இருப்பதை அறிந்த மர்மநபர்கள், விவசாயி மற்றும் சரக்கு வாகன டிரைவரை தாக்கினர். பின்னர் மர்மநபர்கள் சரக்கு வாகனத்தில் ஏறி அவர்களுடன் சென்றனர். சரக்கு வாகனம் சிக்கஜாலா அருகே சென்றபோது, விவசாயி மற்றும் டிரைவரை இறக்கிவிட்டு 2 டன் தக்காளியுடன் சரக்கு வாகனத்தை கடத்தி சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, உடனே இதுகுறித்து ஆர்.எம்.சி. யார்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரக்கு வாகனத்தில் 2 டன் தக்காளி இருப்பதை அறிந்ததும் மர்மநபர்கள், அவர்களை பின்தொடர்ந்து வந்து திட்டமிட்டு கடத்தி சென்றது தெரியவந்தது.

திருடப்பட்ட தக்காளியின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூருவில் 2 டன் தக்காளியுடன் சரக்கு வாகனம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்