மதம் மாறாவிட்டால் ஏ.ஐ. மூலம் ஆபாச வீடியோ உருவாக்குவேன்: கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்
|கடந்த 19-ம் தேதி இளைஞர் ஒருவர் மகளுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் தந்தை, போஜிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மகளை சிறுபான்மையினர் மதத்திற்கு மாறுமாறு இளைஞர் ஒருவர் மிரட்டுகிறார். கடந்த மே 7-ம் தேதி எனது மகள் வாட்ஸ் அப்பிற்கு ஹாய்..ஹலோ என்ற மெசேஜ் வந்தது. தெரியாத நபரிடம் இருந்து வந்த தகவலுக்கு என் மகள் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், அதே எண்ணில் இருந்து ஒரு இளைஞர் ஒருவர் பேசியுள்ளார். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அத்துடன் நீ சிறுபான்மையினர் மதத்திற்கு மாறினால் உன்னை நன்றாக வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் என் மகள் பதில் சொல்லாமல் போன் இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இந்த நிலையில், மே 19-ம் தேதி அதே எண்ணில் இருந்து என் மகளுக்கு ஆபாச செய்தி, ஆபாச வீடியோக்கள் வந்தன. இதை அவள் அழித்ததால் அந்த எண்ணில் இருந்து பேசிய இளைஞர், வீட்டுக்கு வந்து கடத்தி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்வேன் என்றும் மிரட்டி உள்ளார்.
மேலும், மதம் மாறாவிட்டால், ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகளுக்கு வந்த செல்போன் அழைப்பின் எண்ணை சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பரேலியின் போஜிபூரைச் சேர்ந்த பைசல் என்பவரது செல்போன் எண் என்பது தெரிய வந்தது.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பைசலின் தந்தை அமீனுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 2 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.