< Back
தேசிய செய்திகள்
அக்பர் - சீதா பெயரால் எழுந்த சர்ச்சை.. சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட பெயர் மாற்றம்
தேசிய செய்திகள்

'அக்பர் - சீதா' பெயரால் எழுந்த சர்ச்சை.. சிங்கங்களுக்கு சூட்டப்பட்ட பெயர் மாற்றம்

தினத்தந்தி
|
18 April 2024 4:50 PM IST

உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு 'அக்பர் - சீதா' என பெயர் வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

கொல்கத்தா,

திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் உள்ள 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோவிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில், அன்பினால் பெண் சிங்கத்திற்கு சீதா என பெயரிட்டிருப்பார்கள். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது என நீதிபதி இதற்கு பதில் அளித்தார். இப்போது சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது" என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம் எனவும், சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என்றும் மாநில அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு 'சூரஜ்' என்ற பெயரும், சீதா பெண் என்ற சிங்கத்திற்கு 'தயா' என்றும் புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் மேற்கு வங்காள அரசு பரிந்துரைத்துள்ளது

மேலும் செய்திகள்