விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து; ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசிய கங்கனா
|விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் கருத்தை பா.ஜனதா கண்டித்த நிலையில், இன்று ஜே.பி.நட்டாவை கங்கனா ரணாவத் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
பா.ஜனதா அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்-அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜனதா அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என பா.ஜனதா எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மீண்டும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கங்கனா ரனாவத் பேசியுள்ளார். இது தொடர்பாக ஒரு நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியை தனது 'எக்ஸ்' பக்கத்தில் கங்கனா ரனாவத் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில், "விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்காள தேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்" என்று கங்கனா ரனாவத் பேசியிருந்தார்.
இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்தை பா.ஜனதா கண்டித்தது. இது தொடர்பாக பா.ஜனதா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கங்கானாவின் கருத்துக்கும் பா.ஜனதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், கட்சி சார்பில் கொள்கை விஷயங்களை பேச கங்கனா ரனாவத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கங்கனா ரனாவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் கங்கனா ரணாவத் சந்தித்து பேசினார். விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் பேசிய கருத்து சர்ச்சையான பிறகு இரண்டாவது முறையாக ஜே.பி.நட்டாவை கங்கனா சந்தித்துள்ளார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.