ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு; மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை: காங்கிரஸ் எம்.பி. பதில்
|ஜனாதிபதி பற்றிய சர்ச்சை பேச்சில் மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் தூக்கிலிட விரும்பினால் செய்யுங்கள் என்றும் காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த 25ந்தேதி பதவியேற்று கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்த பின் திரவுபதி முர்மு ஆற்றிய உரையில், ஜனநாயகத்தின் சக்தி இதுதான். ஒரு ஏழை வீட்டில் பிறந்த பெண், இந்தியாவின் மூலைமுடுக்கான பகுதியில் பிறந்த ஒரு ஏழை வீட்டு குழந்தை, நாட்டின் அரசியலமைப்பின் மிக உயரிய பதவியை வகிக்க முடியும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
ஜனாதிபதியாக நான் தேர்வானது என்னுடைய சொந்த சாதனை அல்ல, இந்த சாதனை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனையாகவே பார்க்கப்படும். நான் ஒடிசா மாநிலத்தில் ஒரு சிறிய பழங்குடியின கிராமத்தில் பிறந்தவள். எனக்கு இந்நாட்டின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு வார்டு கவுன்சிலர் நிலையில் இருந்து இப்போது ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் நம் நாட்டின் பெருமை. ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது என கூறினார்.
இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றி காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசிய பேச்சு சர்ச்சையை எழுப்பியது. இதுபற்றி அவர் பேசிய வீடியோ ஒன்றில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ராஷ்டிரபத்னி என அவர் கூறியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று திரண்ட பா.ஜ.க.வை சேர்ந்த ஆண் மற்றும் பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். கைகளில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தி இருந்தனர். இந்த போராட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்.
இதுபற்றி நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. தவறுதலாக நான் ராஷ்டிரபத்னி என கூறிவிட்டேன். இதற்காக நீங்கள் இப்போது என்னை தூக்கிலிட வேண்டும் என விரும்பினால், செய்யுங்கள்... ஆளும் கட்சி உள்நோக்கத்துடன் மடுவை மலையாக்க முயற்சி செய்கிறது என கூறியுள்ளார்.