கடவுள் ராமர் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சர்ச்சை பேச்சு...!
|மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை என்று ஜிதேந்திர அவாத் கூறினார்.
அகமதுநகர்,
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிதேந்திர அவாத். இவர் மராட்டிய மாநிலம் சீரடியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதில் அவர் பேசியதாவது,
கடவுள் ராமர் ஒரு பகுஜன் ஆவார். அவர் நமக்கு சொந்தமானவர். ராமர் சைவம் உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார். நமக்கு ராமரை முன்மாதிரியாக காண்பித்து அனைவரையும் சைவம் உண்பவர்களாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
மேலும் யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா காந்தி ஓபிசி என்பதால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. காந்தியின் படுகொலைக்கு சாதிவெறிதான் உண்மையான காரணம் என்று அவர் கூறினார்.
வரும் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், கடவுள் ராமர் குறித்து அவர் பேசிய கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.