< Back
தேசிய செய்திகள்
இந்தியர்களின் தோற்றம் குறித்து காங்கிரஸ் நிர்வாகி சர்ச்சை கருத்து - பா.ஜ.க. கண்டனம்
தேசிய செய்திகள்

இந்தியர்களின் தோற்றம் குறித்து காங்கிரஸ் நிர்வாகி சர்ச்சை கருத்து - பா.ஜ.க. கண்டனம்

தினத்தந்தி
|
8 May 2024 4:40 PM IST

சாம் பிட்ரோடாவின் கருத்து இந்தியாவின் கலாசாரத்தையும், அடையாளத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக பா.ஜ.க. விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சீனர்களைப் போலவும், தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வட இந்தியர்கள் வெள்ளையர்களைப் போலவும் இருப்பதாக கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சாம் பிட்ரோடாவின் கருத்து இந்தியாவின் கலாசாரத்தையும், அடையாளத்தையும், இந்திய மக்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக பா.ஜ.க . கூறியுள்ளது.

இது குறித்து பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், "மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்திய மக்களுக்கு எதிரான தங்களது கருத்துகளால் காங்கிரஸ் கட்சி அம்பலமாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த சித்தாந்தமும் மக்களைப் பிளவுபடுத்துவதுதான்" என்று விமர்சித்தார்.

மேலும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்தியாவைச் சேர்ந்த நான், இந்தியராகவே தெரிகிறேன். எங்கள் கட்சியில் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த உற்சாகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியராகவே தெரிகிறார்கள். மேற்கு இந்தியாவைச் சேர்ந்த எனது சகாக்களும் இந்தியர்களாகவே தெரிகிறார்கள்.

ஆனால் ராகுல் காந்தியின் வழிகாட்டியான இனவெறியர்களுக்கு நாம் அனைவரும் ஆப்பிரிக்க, சீன, அரேபியர் மற்றும் வெள்ளையர்களாகத் தெரிகிறோம்! உங்கள் மனநிலையையும், உங்கள் அணுகுமுறையையும் வெளிப்படுத்தியதற்கு நன்றி. இது 'இந்தியா' கூட்டணியின் அவமானம்" என்று பதிவிட்டுள்ளார்.

அதே சமயம், இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்கு சாம் பிட்ரோடா கூறிய கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அவரது பேச்சுக்களுக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்காது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்