< Back
தேசிய செய்திகள்
இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜாஸ் ரக போர் விமானங்களை வாங்க முடிவு - விமானப்படை தளபதி தகவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜாஸ் ரக போர் விமானங்களை வாங்க முடிவு - விமானப்படை தளபதி தகவல்

தினத்தந்தி
|
4 Oct 2023 2:44 AM IST

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜாஸ் ரக போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய விமானப்படையை மேலும் பலப்படுத்தும் வகையில் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜாஸ் மார்க்-1ஏ ரக போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 83 தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை வாங்க ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை தயாரித்து வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 97 தேஜாஸ் மார்க்-1ஏ விமானங்களை வாங்குவதற்கு ரூ.1.15 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கூடுதல் 97 தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை வாங்குவதன் மூலம் இந்திய விமானப்படையில் சேரும் தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயரும். இது தவிர 84 சுகோய்-30எம்கேஐ போர் விமானங்கள் ரூ.60,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும்" என கூறினார்.

மேலும் செய்திகள்