நாக்பூர் விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 2 பேர் கைது
|நாக்பூர் விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாக்பூர்,
மராட்டிய மாநிலம் நாக்பூர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மும்பை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணி ஒருவரின் உடைமைகளில் சோதனை செய்தனர். அப்போது இரும்பு ரோலர் எந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ எடையுள்ள அம்பேடமன் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.24 கோடி ஆகும்.
இது குறித்து வருவாய் புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து பயணியை கைது செய்து விசாரணை நடத்தினர். கென்யா நாட்டின் நைரோபி நகரை சேர்ந்த அவர், சார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம் வழியாக நாக்பூர் வந்து இறங்கியபோது பிடிபட்டு உள்ளார். இந்த போதைப்பொருளை டெல்லி சுபாஷ் நகர் பகுதியை சேர்ந்தவருக்கு ஒப்படைக்க முயன்றதாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் டெல்லி சென்று அந்த நபரையும் கைது செய்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.