தொடர் விடுமுறை: திருப்பதி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
|திருப்பதியில் சீனிவாச காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் என 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே ரூ.300 மற்றும் கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை உள்ளிட்ட பல்வேறுகட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர திருப்பதியில் சீனிவாச காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் என 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த டோக்கன்களை பெறுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச டோக்கன்களை பெறுவதற்கு சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் நேற்று 75,625 பேர் சாமி தரிசனம் செய்தனர். 37,027 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியன் காணிக்கை ரூ.3.21 கோடி வசூலானது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியு காம்ப்ளக்ஸ்சில் அறைகள் நிரம்பி வழிந்தன. இன்று காலை முதல் சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது.
கோடை விடுமுறையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் இன்று முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 24 மணி நேரமும் பணியில் இருக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.