கேரளாவில் தொடர் கனமழை: 21 நிவாரண முகாம்களில் 900 பேர் தஞ்சம்
|கேரளாவில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்களை பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகளில் சென்று மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். பொதுமக்களை தங்க வைப்பதற்காக திருவனந்தபுரம் மாவட்டம் முழுவதும் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. திருவனந்தபுரம் தாலுகாவில் உள்ள 16 முகாம்களில் 580 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சிராயின்கீழ் தாலுகாவில் அமைக்கப்பட்டிருக்கும் 4 முகாம்களில் 249 பேரும், வர்கலா தாலுகாவில் உள்ள நிவாரண முகாமில் 46 பேரும் தங்கியிருக்கின்றனர். மாவட்டம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள 21 நிவாரண முகாம்களில் மொத்தம் 900 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கனமழை காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் நாளை மறுநாள்(18-ந்தேதி) வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.