நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை: நிரம்பியது கே.ஆர்.எஸ். அணை
|கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 77 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 69 ஆயிரத்து 617 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 122.70 அடியாக இருந்தது. அணை நிரம்ப 2 அடி மட்டுமே பாக்கி இருந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்ததால், மாலை 6 மணி அளவில் கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி நிரம்பியது.
நீர்வரத்து அதிகரிப்பு
இரவில் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. நேற்று இரவு நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரத்து 795 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அது அதிகரிக்கப்பட்டு நேற்று இரவு அணையில் இருந்து வினாடிக்கு 52 ஆயிரத்து 162 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதேபோல மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,281.89 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 396 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இரவில் அது குறைந்து வினாடிக்கு 29 ஆயிரத்து 855 கனஅடியாக இருந்தது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரகூரு தாலுகா நுகு கிராமத்தில் நுகு அணை அமைந்துள்ளது. இந்த அணையும் நிரம்பியதால் அங்கிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் கபிலாவில் திறக்கப்பட்டுள்ளது.
வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி
கபினி, நுகு அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டு ஓடி, டி.நரசிப்புரா அருகே திருமா கூடலுவில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்ட நிலையில், நேற்று அது அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 77 ஆயிரத்து 162 கனஅடி நீர் செல்கிறது.
இந்த 3 அணைகளில் இருந்தும் திறக்கப்பட்ட தண்ணீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளம் சூழ்ந்து 92 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் காவிரி கரையோர பகுதிகளில்உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.