அதானி விவகாரத்தில் தொடர் அமளி : நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு
|அதானி விவகாரம் தொடர்பான அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியவுடன், சமீபத்தில் மறைந்த புனே தொகுதி பா.ஜனதா எம்.பி. கிரிஷ் பபட், முன்னாள் எம்.பி.யும், நடிகருமான இன்னொசன்ட் ஆகிேயாரின் மறைவுச்செய்தியை சபாநாயகர் ஓம்பிர்லா வாசித்தார்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுனம் அனுசரித்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, சபாநாயகர் இருக்கையில் ராஜேந்திர அகர்வால் இருந்தார். சபையின் மையப்பகுதிக்கு சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அதானி குழும மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கோஷமிட்டனர்.
அமளிக்கிடையே சில அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இருக்கைக்கு திரும்புமாறு கூறியும் கேட்காததால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து ராஜேந்திர அகர்வால் உத்தரவிட்டார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை என்பதால், சபை நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்று அறிவித்தார்.
மாநிலங்களவை கூடியவுடன், அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்திருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்புநிற முக கவசம் அணிந்திருந்தனர்.
சில அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டவுடன், சபையை பிற்பகல் 2 மணிவரை சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார்.
மசோதா நிறைவேறியது
பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, மாநிலங்களவை தினத்தையொட்டி, எம்.பி.க்களுக்கு ஜெகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார். அமளியில் ஈடுபடாமல், விவாதத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட போட்டி சட்ட திருத்த மசோதாவை பரிசீலனைக்கு முன்வைத்தார். அம்மசோதா, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, சபை 5-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.