மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசனை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
|கூடிய விரைவில் டெல்லிக்கு சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெலகாவி:
பெலகாவி விமான நிலையத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம்
பா.ஜனதா சார்பில் தற்போது மக்கள் சங்கல்ப யாத்திரை நடைபெற்று வருகிறது. நான், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்று உள்ளோம். இந்த யாத்திரைக்கு மத்தியில் கூடிய விரைவில் டெல்லிக்கு செல்ல உள்ளேன். அங்கு பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். பெலகாவிக்கு மந்திரிசபையில் இடம் அளிப்பது குறித்து அப்போது தெரியவரும்.
மராட்டிய மாநிலம் கொல்லாபுராவில் கனேரி மடத்தில் கன்னட பவன் கட்டுவதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி எனது கவனத்திற்கும் வந்தது. தற்போது மராட்டியத்தில் பல்வேறு சங்கங்களில் கன்னட பவன் உள்ளது. அந்த மாநிலத்தில் பல கோவில்கள் உள்ளது. அந்த கோவில்களுக்கு கன்னடர்கள் சென்று வருகிறார்கள். எனவே மாநிலம் மற்றும் மொழி விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.
தலைவர்கள் எடுக்கும் முடிவே...
கே.எல்.இ. அமைப்பின் தலைவரான பிரபாகர கோரேயின் 75-வது பிறந்தநாள் பவள விழாவை கொண்டாடுவது சந்தோஷமான விஷயமாகும். ஏனெனில் வடகர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பங்கு மிகப்பெரியது.
மந்திரிசபை விரிவாக்கம் செய்யும் விவகாரத்தில் பா.ஜனதா மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேசிய பின்பு, அதுபற்றி விரிவாக பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.