< Back
தேசிய செய்திகள்
புதிய கல்வி கொள்கை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் விரைவில் ஆலோசனை; மந்திரி மது பங்காரப்பா பேட்டி
தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் விரைவில் ஆலோசனை; மந்திரி மது பங்காரப்பா பேட்டி

தினத்தந்தி
|
29 July 2023 12:15 AM IST

புதிய கல்வி கொள்கை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் விரைவில் ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறியுள்ளார்.

பெங்களுரு:

பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலின் போது நாங்கள் அளித்த வாக்குறுதிப்படி மாநிலத்திற்கு தேவையான கல்வி கொள்கையை நாங்கள் தயாரிக்கிறோம். குழந்தைகளின் கல்வி முறை மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும். அதனால் தேசிய கல்வி கொள்கையில் சில மாற்றங்கள் செய்கிறோம். புதிய கல்வி கொள்கை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா வருகிற 2-ந் தேதி உயர்கல்வி மற்றும் தொடக்க கல்வி மந்திரிகளின் கூட்டத்தை நடத்த இருந்தார். ஆனால், அன்றைய தினம் சித்தராமையா டெல்லி செல்வதால், இந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த கூட்டம் நடைபெறும்.

கர்நாடகத்தில் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாடத்திட்டம் திருத்தம், புதிய தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல விவாதங்களை பா.ஜனதா உருவாக்கியுள்ளது. கல்வியில் கட்சி, அரசியல், சித்தாந்தங்களை நாங்கள் பார்ப்பது இல்லை. நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் கல்வியை வழங்குவதே எங்களின் முன்னுரிமை.

நமது நாட்டில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் என பல பிராந்திய வேறுபாடுகள் உள்ளன. இவை அனைத்திற்கும் போதுமான தீர்வை காண்பதில் தேசிய கல்விக் கொள்கை சரியானதாக இல்லை. அதனால் தான் நாங்கள் சொந்தமாக கல்வி கொள்கையை உருவாக்குகிறோம். மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த பா.ஜனதா அரசு தவறிவிட்டது.

இதனால் அங்குள்ள குழந்தைகளின் கல்வியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த யாராவது அங்கிருந்து கல்வி கற்க ஆர்வமாக கர்நாடகம் வந்தால், கடுமையான விதிகளை சுட்டிக்காட்டி, ஆவணங்களை கேட்டு அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. குழந்தைகள் எந்த பிரச்சினையும் இன்றி கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். அதன்படி நான் செயல்படுவேன்.

கல்விக் கொள்கை, பாடத்திட்ட திருத்தம் தொடர்பாக பா.ஜ.க, செய்த தவறுகளை சரி செய்வோம். பிரச்சினை செய்பவர்கள் தொடர்ந்து செய்யட்டும், அவர்களுக்கு 5 ஆண்டுகள் உள்ளன. பா.ஜனதாவுடன் மற்றொரு கட்சியும் சேர்ந்துள்ளது. இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதே எங்கள் நோக்கம். அதன்படி செயல்படுவோம் என்றார்.

இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்