< Back
தேசிய செய்திகள்
கத்தார் சிறையில் உள்ள 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை மீட்க தூதரக ரீதியில் முயற்சி - மத்திய வெளியுறவுத்துறை தகவல்
தேசிய செய்திகள்

கத்தார் சிறையில் உள்ள 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை மீட்க தூதரக ரீதியில் முயற்சி - மத்திய வெளியுறவுத்துறை தகவல்

தினத்தந்தி
|
24 Nov 2022 10:51 PM IST

முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை மீட்பதற்கு தூதரக ரீதியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரிந்தாம் பக்‌ஷி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேர் கத்தாரில் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான புனேந்து திவாரி என்பவரின் சகோதரி மீத்து பார்கவா, தனது சகோதரர் உள்ளிட்ட 8 பேரை மீட்க உதவுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், முன்னாள் கடற்படை வீரரான தனது சகோதரர் கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளிப்பதற்காக தாஹ்ரா குளோபல் கன்சல்டன்சி ஏஜென்சி என்ற நிறுவனம் மூலம் கத்தார் நாட்டுக்குச் சென்றதாகவும், கடந்த ஆகஸ்ட் 30-ந்தேதி தனது சகோதரர் உள்ளிட்ட 8 பேரை கத்தார் காவல்துறை கைது செய்ததாகவும் கூறியுள்ளார்.

அவர்கள் மீது தொடர்ப்பட்டுள்ள வழக்கின் விவரங்கள் எதையும் கத்தார் அரசு வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து தனது சகோதரரை மீட்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அரசு முறைப்பயணமாக கத்தார் சென்றுள்ளார். இந்த பயணம் தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்‌ஷி இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அப்போது அவரிடம் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் குறித்து கத்தார் அரசிடம் பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரிந்தாம் பக்‌ஷி, துணை ஜனாதிபதியின் கத்தார் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இது குறித்து பேசப்படவில்லை என்றும், 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை மீட்பதற்கு தூதரக ரீதியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்