தேர்தல் கமிஷனர்களை கொலீஜிய முறையில் நியமிக்க கோரிய மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
|தேர்தல் கமிஷனர்களை கொலீஜிய முறையில் நியமிக்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்குகிறது.
புதுடெல்லி,
தேர்தல் கமிஷனர்களை கொலீஜிய முறையில் நியமிக்க கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்தது.
இந்த விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன், தேர்தல் கமிஷனர்களை கொலீஜியம் போன்ற பாரபட்சமற்ற அமைப்பின் வாயிலாக தேர்வு செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும்போது, தேர்தல் கமிஷனரை மத்திய அரசு நியமித்துள்ளது என்ற விவரத்தை வாதத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது அருண் கோயல் கமிஷனராக நியமிக்கப்படாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்த நீதிபதிகள், அவருடைய நியமனம் தொடர்பான கோப்புகளை நாளை சமர்ப்பிக்க மத்திய அரசின் தலைமை வக்கீலுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், தேர்தல் கமிஷனர்களை கொலீஜிய முறையில் நியமிக்க கோரிய ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று கூறுகிறது.