எடியூரப்பாவை அரசியலில் இருந்து ஒழிக்க சதி; விஜயேந்திரா பரபரப்பு குற்றச்சாட்டு
|எடியூரப்பாவை அரசியலில் இருந்து ஒழிக்க வேண்டும், நான் அரசியலில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக சதி நடப்பதாக விஜயேந்திரா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், கர்நாடக மாநில பா.ஜனதா துணைத்தலைவருமான விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அரசியலில் இருந்து ஒழிக்க சதி
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது லோக் அயுக்தாவில் பதிவான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஏற்கனவே 30 வழக்குகளை எடியூரப்பா எதிர்கொண்டுள்ளார். தற்போது 31-வது வழக்கு இதுவாகும். யாருக்கும் பயந்து ஓடுபவர்கள் நாங்கள் இல்லை. எடியூரப்பா தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து நிரபாரதியாக வெளியே வருவார். எடியூரப்பாவை அரசியலில் இருந்து ஒழிக்க சதி நடக்கிறது.
அதே நேரத்தில் நான் அரசியலில் வளர்ந்து விடக்கூடாது என்பதிலும் சதி நடக்கிறது. இதற்கு தக்க பதிலடி யாருக்கு கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா எந்த ஒரு நிறுவனத்திற்கும் பி.டி.ஏ. சார்பில் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கவில்லை. எங்களது அரசியல் விரோதிகள் மூலமாக, எங்களுக்கு எதிரான சதி நடக்கிறது.
வழக்குகளை எதிர்கொள்ள தயார்
எங்களுக்கு எதிராக சதி செய்பவர்கள் யார் என்று வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை. சதி செய்பவர்களுக்கு அது பற்றி தெரியும். எனக்கும், எனது குடும்பத்திற்கும் எதிராக சதி செய்பவர்களை எதிர்கொள்ளும் சக்தி எனக்கு இருக்கிறது. எடியூரப்பா மீது வழக்கு தொடர்ந்த விவகாரத்தில், எங்களது அரசியல் விரோதிகளின் தலையீடு இருக்கிறது. தற்போது நான் அரசியலில் வளர்ந்து வருகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் என் மீது வழக்குகள் தொடருவது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும். அதனை சரியாக கையாள வேண்டியது அவசியமாகும். இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.