கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி; டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
|கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி நடப்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜனதா 66 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன. இதனால் இரு கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைத்து உள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். காங்கிரசுக்கு 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு ஜனதாதளம் (எஸ்) கட்சி, பா.ஜனதாவுடன் வெளிப்படையாகவே கைகோர்த்துள்ளது. இது
ஜனதாதளம் (எஸ்) கட்சியில் உள்ள நிர்வாகிகள் சிலருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அரசியல் ரீதியாக ஜனதா தளம் (எஸ்) கட்சியின் எதிர்காலத்தை காப்பாற்றிக்கொள்ள முன்னாள் முதல்-மந்திரியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி இந்த முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்திலும் அரசுக்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தின. இத்தகைய சூழ்நிலையில் குமாரசாமி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு ஒரு வாரம் தங்கி இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக காங்கிரசார் கூறி வருகிறார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பது என்பது அவ்வளவு
சுலபமான விஷயமல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அரசியலில் எதுவும் நடைபெறலாம் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் குமாரசாமி வெளிநாட்டில் இருந்து கொண்டு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாக துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூருவில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு செல்கிறார்கள். இதுகுறித்து எங்களிடம் எல்லா தகவல்களும் உள்ளன. அவர்களின் (குமாரசாமி) தந்திரம் என்ன என்பது எனக்கு தெரியும். கா்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்க வெளிநாட்டில் சதிகள் நடக்கின்றன. யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.
பெங்களுரு வெளிவட்டச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் சிலர் என்னை இன்று (நேற்று) சந்திக்க உள்ளனர். அவர்களுடன் நான் ஆலோசனை நடத்துகிறேன். வருகிற 31-ந் தேதி நிலத்தை வழங்கும் விவசாயிகளுடன் விவாதிக்க உள்ளேன். இந்த விஷயத்தில் ஒரு முடிவு எட்டப்படும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.