200 தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன் என நினைத்து கொள்ளுங்கள்: அசோக் கெலாட் பிரசாரம்
|தேர்தல் பிரசாரத்திற்கு என்னால் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது என அசோக் கெலாட் கூறினார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசும்போது, தேர்தலில் 200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 150 இடங்களில் பிரசாரத்திற்கு வரும்படி என்னிடம் கேட்டு கொண்டனர்.
ஆனால், பிரசாரத்திற்கு என்னால் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. அதனால், இந்த அனைத்து இடங்களிலும் நானே போட்டியிடுகிறேன் என நினைத்து கொள்ளுங்கள்.
இந்த அரசை தொடர செய்ய வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறேன். தேர்தலில் உள்ளூர் அளவில் யார் போட்டியிடுகிறார்கள் என்று நீங்கள் பார்க்க வேண்டியதில்லை என பேசியுள்ளார்.
இந்த அரசை தொடர செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்திய கெலாட், அவருடைய பதவி காலங்களில் செய்த சாதனைகள், பத்து உத்தரவாதங்களை நிறைவேற்றியது ஆகியவற்றை சுட்டி காட்டியதுடன், திரும்பவும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், கூடுதலாக 7 வாக்குறுதிகளையும் அமல்படுத்துவேன் என்று கூறினார்.