< Back
தேசிய செய்திகள்
விருப்பத்துடன் நடந்த உடலுறவை பலாத்காரம் என கூற முடியாது.. கர்நாடக ஐகோர்ட்
தேசிய செய்திகள்

விருப்பத்துடன் நடந்த உடலுறவை பலாத்காரம் என கூற முடியாது.. கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி

தினத்தந்தி
|
21 July 2024 5:48 PM IST

இருவருக்கும் இடையே ஒருபோதும் திருமணம் தொடர்பான எந்த உறுதிமொழியும் இருந்ததில்லை, ஒருமித்த உறவு மட்டுமே இருந்தது என குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2012-ல் ஒரு கடைக்கு சென்றபோது அந்த கடையின் உரிமையாளருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கிடையில் உடல் ரீதியான உறவும் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் அந்த ஆண் இவரிடமிருந்து விலகி முற்றிலுமாக தவிர்த்துவிட்டு வேறொரு பெண்ணை காதலித்துள்ளார்.

இதையடுத்து, அந்த ஆண் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏமாற்றப்பட்ட அந்த பெண், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பெண்ணின் வக்கீல் வாதாடும்போது, தனது கட்சிக்காரரை குற்றம்சாட்டப்பட்டவர் திருமணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார் என்ற வாதத்தை முன்வைத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கூறுகையில், "புகார்தாரர் ஏப்ரல் 2018-ல் எனது கட்சிக்காரரின் கடைக்கு சென்ற பிறகு, அவர் தனக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும், அவருடன் உறவை தொடர விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். அதன்பின்னர் அவர் மீதான பாலியல் பலாத்கார புகார் அளித்திருப்பது, மிரட்டி பணம் பறிக்கும் வகையிலானது. எனது கட்சிக்காரர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இருவருக்கும் இடையே ஒருபோதும் திருமணம் தொடர்பான எந்த உறுதிமொழியும் இருந்ததில்லை, ஒருமித்த உறவு மட்டுமே இருந்தது" என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, திருமணம் என்ற சாக்குப்போக்கில் இருந்தாலும் சரி.. மற்ற காரணமாக இருந்தாலும் சரி.. உறவுமுறை முறிந்தால், அவர்களின் ஒருமித்த உடலுறவை கற்பழிப்பாக கருத முடியாது என்றார்.

'புகார் அளித்துள்ள பெண்ணே, தான் அந்த நபரை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இப்போது அவர்களுக்கிடையில் காதல் இல்லை என்பதற்காக இதற்குமுன் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டது பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவு 375-ன் கீழ் வராது' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி.

மேலும் செய்திகள்