< Back
தேசிய செய்திகள்
வீடியோவை பகிர்ந்து காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி - காங்கிரஸ் பொதுச் செயலாளர் கடும் கண்டனம்..!
தேசிய செய்திகள்

வீடியோவை பகிர்ந்து காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி - காங்கிரஸ் பொதுச் செயலாளர் கடும் கண்டனம்..!

தினத்தந்தி
|
12 Dec 2023 10:47 PM IST

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது மணி ஹெய்ஸ்ட் (இணைய தொடர்) போன்ற புனைவுகளுக்கு அவசியமில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

புதுடெல்லி,

ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேச்சுபொருளாகி உள்ளது. இந்த சோதனை குறித்து பா.ஜ.க.வினர் பலரும் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்த வீடியோ ஒன்றை பா.ஜ.க., தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தைக் காட்டும் காட்சிகளும், காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றது. இந்த வீடியோவைப் பகிர்ந்த பிரதமர் மோடி, "இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது மணி ஹெய்ஸ்ட் (இணைய தொடர்) போன்ற புனைவுகளுக்கு அவசியமில்லை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளையர்களாக தொடர்ந்துவரும் முன்னோடிகள் இவர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் வலைதளத்தில், "நரேந்திர மோடி அவர்களுக்கு,

1947க்குப் பிறகு நடந்த மிகப்பெரிய பணக் கொள்ளையை நீங்கள் விளக்க வேண்டும் என்று தேசம் விரும்புகிறது.

உங்கள் நெருங்கிய நண்பரான அதானி, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மற்றும் மின் சாதனங்களின் விலையை உயர்த்தி, இந்தியாவிலிருந்து 17,500 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.

அவர் மேலும் வெளிநாடுகளில் உள்ள செயல்படாத ஷெல் நிறுவனங்களின் மூலம் 20,000 கோடி ரூபாயை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டவிரோதமாக தனது பங்கு விலைகளை உயர்த்துகிறார்.

அவருக்கு வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கடனாக கொடுக்கப்படுகிறது. ED, CBI மற்றும் IT ஐப் பயன்படுத்தி அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட திட்டங்களில் பணத்தை முதலீடு செய்கிறார். எங்கோ இருந்த அவர் தற்போது உலகின் இரண்டாவது பணக்காரராக உயர்ந்துள்ளார். இந்த வளர்ச்சிக்கு எல்லாம் யார் பணம் கொடுக்கிறார்கள்?

சாங் சுங்-லிங் மற்றும் அதானி குழுமம் சம்பந்தப்பட்ட சமீபத்திய விவகாரத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப பிரதமர் நரேந்திர மோடி முயற்சிப்பதாகவும், அது பலிக்காது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்