சத்தீஷ்காரில் காங்கிரசின் 3 நாள் மாநாடு: இன்று தொடங்குகிறது
|சத்தீஷ்காரில் காங்கிரசின் 3 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. அதில், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் வகுக்கப்படுகிறது.
ராய்ப்பூர்,
காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு, சத்தீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இது 3 நாள் மாநாடு ஆகும். நாடு முழுவதும் இருந்து 15 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையால் உற்சாகம் கிடைத்த நிலையில், இம்மாநாடு நடக்கிறது.
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மாநாட்டில் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதன்மூலம் அவர் தலைமையில் புதிய காரிய கமிட்டி அமைக்க வழி வகுக்கப்படும்.
வழிகாட்டும் குழு
பழைய காரிய கமிட்டி கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே அந்த குழுவின் கூட்டம் நடக்கிறது. அதில், காரிய கமிட்டிக்கு தேர்தல் நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது.
கட்சியில் உள்ள இளைஞர்கள், தேர்தல் நடத்தப்படுவதை விரும்புகின்றனர். ஆனால், மூத்த தலைவர்கள், நியமன முறையை விரும்புகிறார்கள். அதிருப்தியை தவிர்க்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கமும் நியமன முறை அவசியம் என்று கருதுகிறார்கள்.
சட்டசபை தேர்தல்கள்
இந்த ஆண்டு 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அவற்றில், திரிபுராவில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
கர்நாடகா, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலுங்கானா, மிசோரம் ஆகியவை, தேர்தலை சந்திக்கும் இதர மாநிலங்கள் ஆகும். இவற்றில், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகியவை காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்.
மேற்கண்ட சட்டசபை தேர்தல்களை சந்திப்பது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அங்குள்ள மாநில காங்கிரசாருக்கு வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தல்
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், காங்கிரசுக்கு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதநிலையில், இந்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது.
அதற்காக கருத்தொற்றுமை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசு பதவி ஏற்கும் என்று மல்லிகார்ஜுன கார்கே பேசி வருகிறார்.
இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாரத் ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகள், காங்கிரசின் தலைமையை ஏற்க முன்வராதது காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இன்னொரு பாதயாத்திரை
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் காங்கிரசின் கோஷ்டிப்பூசலுக்கு முடிவு கட்டுவது பற்றியும் மாநாட்டில் பேசப்படுகிறது.
மேலும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாதயாத்திரை நடத்தியதுபோல், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மற்றொரு பாதயாத்திரை நடத்துவது பற்றி மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. அருணாசலபிரதேசத்தில் தொடங்கி, குஜராத் மாநிலம்வரை இந்த யாத்திரை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
ராகுலுக்கு பிரதமர் பதவி
இதற்கிடையே, ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ஷகீல் அகமது கூறியுள்ளார். சத்தீஷ்கார் மாநாட்டுக்கு செல்லும் வழியில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
பா.ஜனதா கூட்டணி, ஆட்சி அமைத்தால், பா.ஜனதாவை சேர்ந்தவர்தான் ஆட்சிப்பொறுப்பில் இருப்பார். அதுபோல், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால், காங்கிரஸ்காரர்தான் பிரதமர் ஆக வேண்டும்.
ராகுல்காந்தியை பிரதமர் ஆக பார்க்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். அவர் பிரதமர் ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.