சட்டசபை தேர்தல் குறித்து காஷ்மீர் மக்களிடம் கையெழுத்து இயக்கம் - காங்கிரஸ் தொடங்கியது
|சட்டசபை தேர்தல் குறித்து காஷ்மீர் மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் தொடங்கியது
ஜம்மு,
காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை வலியுறுத்தும் வகையில் காங்கிரசின் இளைஞரணி சார்பில் மக்களிடையே கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. ஜம்முவின் பாகு கோட்டை பகுதியில் நேற்று தொடங்கிய இந்த கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக கையெழுத்து போட்டனர்.
இது குறித்து காஷ்மீர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் பரத் கூறுகையில், 'காஷ்மீரில் தேர்தல் வேண்டாம் எனவும், தற்போதைய நிர்வாகத்தில் திருப்தியாக இருப்பதாகவும் 80 சதவீத மக்கள் தெரிவித்து இருப்பதாக துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார். ஆனால் காஷ்மீர் மக்களின் உண்மையான உணர்வுகளை எங்கள் கையெழுத்து பிரசாரம் வெளிக்கொண்டு வரும்' என தெரிவித்தார்.
காஷ்மீரில் தேர்தல் ஜனநாயகம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை முன்வைக்க விரும்பும் மக்களை ஒன்றிணைக்கும் இயக்கமாக இது அமைந்திருப்பதாக தெரிவித்த பரத், இந்த இயக்கம் காஷ்மீர் முழுவதும் கொண்டு செல்லப்படும் என்றும் கூறினார்.