எனது தலைமையிலேயே 135 சீட்டுகளை காங்கிரஸ் கைப்பற்றியது; டெல்லி செல்வேன்: டி.கே. சிவக்குமார் பரபரப்பு பேட்டி
|கர்நாடக சட்டசபை தேர்தலில் எனது தலைமையிலேயே 135 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது என பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின் பேட்டி அளித்து, டி.கே. சிவக்குமார் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான 113 தொதிகளை காட்டிலும் கூடுதலாக, 135 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், கூட்டணி தேவை எதுவுமின்றி தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரம் பெற்று உள்ளது. பா.ஜ.க. 66 தொகுதிகளை கைப்பற்றி தேர்தலில் தோல்வி அடைந்தது.
இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் பிரதேச கமிட்டி தலைவரான டி.கே. சிவக்குமார் மிக அதிக அளவாக 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனகபுரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று, வருணா தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் வி. சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டு 2 நாட்கள் ஆன சூழலில், கர்நாடக முதல்-மந்திரி யார்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டு உள்ளது. இதில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான நேரடி போட்டி நிலவி வருகிறது. இதற்கேற்ப அவர்களின் ஆதரவாளர்களும் பல பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தினர். முதல்-மந்திரி பதவியை கட்சி வழங்கினால் ஏற்று கொள்வேன் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
இந்த சூழலில், அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று கூடியது. இதுபற்றி மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி கூட்டத்தின் அறிக்கை கட்சி மேலிடத்திற்கு வழங்கப்படும். அதன்பின்னர் அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்கும் என கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு இன்று மதியம் புறப்பட்டு சென்றார். ஆனால், டி.கே. சிவக்குமார் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவர் பெங்களூருவில் உள்ள ஷாங்ரி-லா ஓட்டலில் காங்கிரசார் நியமித்த கண்காணிப்பு குழுவினரை சந்தித்து பேசினார்.
இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் என்ன பணியை செய்ய வேண்டுமோ, அந்த பணியை செய்து விட்டேன். என்னை டெல்லிக்கு அழைப்பது பற்றி கட்சியின் உயர்மட்டம் கூடி முடிவு செய்ய வேண்டும். நாங்கள் ஒரு-வரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். கட்சியின் தலைமைக்கு முடிவை விட்டு விடுவது என்பதே அது. டெல்லிக்கு போவது பற்றி நான் முடிவு செய்யவில்லை என முதலில் கூறினார்.
இந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின்னர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து சிவக்குமார் பேசும்போது, இன்று எனது பிறந்த நாள் ஆகும். எனது குடும்பத்தினரை நான் சந்திப்பேன். அதன்பின்னர், டெல்லிக்கு செல்வேன்.
முதல்-மந்திரியை நியமிக்கும் விவகாரம் கட்சியின் உயர்மட்டத்திற்கு விடப்பட்டு உள்ளது. எனது இலக்கு, கர்நாடக மக்களிடம் விசயங்களை கொண்டு சேர்ப்பது. நான் அதனை செய்து விட்டேன் என கூறியுள்ளார். காங்கிரஸ் மேலிடம், என்னையும், சித்தராமையாவையும் டெல்லி வரும்படி அழைத்து உள்ளது.
சோனியா காந்தி, கார்கே எனக்கு தலைவர் பதவியை வழங்கினார்கள். எனது தலைமையிலேயே 135 சீட்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.
எப்போது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களை விட்டு போனார்களோ, எங்களது ஆட்சியை நாங்கள் இழந்தோமோ, அப்போது, நான் நம்பிக்கையை இழக்கவில்லை என கூறியுள்ளார். (கடந்த 2019-ம் ஆண்டு காங்கரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி கட்சி ஆட்சியை பற்றி அவர் குறிப்பிட்டு உள்ளார்). கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்களை வெளியிட நான் விரும்பவில்லை.
நான் ஒரு தனிமனிதன். எனக்கு ஒரு விசயத்தில் நம்பிக்கை உள்ளது. ஒரு தனிமனிதன் தைரியத்துடன் இருந்து மெஜாரிட்டியை பெற முடியும். எல்லா எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு போனபோது, நான் மனம் தளரவில்லை என கூறியுள்ளார். இதனால், கர்நாடக முதல்-மந்திரிக்கான போட்டியில் சிவக்குமாரும் இருக்கிறார் என்று தெளிவுப்படுத்தி இருக்கிறார்.