< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரை ராகுல் காந்தி அடைவதற்குள் காங்கிரஸ் முக்தி பெற்று விடும்:  பா.ஜ.க. மந்திரி கிண்டல்
தேசிய செய்திகள்

காஷ்மீரை ராகுல் காந்தி அடைவதற்குள் காங்கிரஸ் முக்தி பெற்று விடும்: பா.ஜ.க. மந்திரி கிண்டல்

தினத்தந்தி
|
27 Sep 2022 2:35 AM GMT

இந்திய ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீரை ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் என பா.ஜ.க. மந்திரி கிண்டலாக கூறியுள்ளார்.



கவுகாத்தி,


காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கடந்த 7-ந்தேதி தனது இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். இடையிடையே ஓய்வு ஒடுத்து கொண்டு தனது பாதயாத்திரையை அவர் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அசாமில் தூப்ரி மாவட்டத்தில் ராஜீவ் பவனில் இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இரு குழுக்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் சில தலைவர்கள் முன்னிலையிலேயே இந்த மோதல் நடந்தது.

வருகிற நவம்பர் 1-ந்தேதி அசாமில் நடைபெற உள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றி ஆலோசிப்பதற்காக நடந்த இந்த கூட்டத்திலேயே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி பா.ஜ.க. தலைவர் மற்றும் அசாம் மந்திரியான பிஜூஷ் ஹசாரிகா கூறும்போது, நடக்கின்ற சம்பவங்களை பார்க்கும்போது, காஷ்மீரை ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் போல் தெரிகிறது என கிண்டலாக கூறியுள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் இதனுடன், காங்கிரஸ் தொண்டர்களின் மோதல்கள் அடங்கிய செய்திகளையும் பகிர்ந்து உள்ளார். கேரளாவில் நடந்து வரும் இந்த பாதயாத்திரை வருகிற 29-ந்தேதி கர்நாடகாவை சென்றடைகிறது.

மேலும் செய்திகள்