'தலித் மக்களை வாக்கு சேகரிக்கும் கருவியாக காங்கிரஸ் கருதியது' - ஜே.பி.நட்டா விமர்சனம்
|பா.ஜ.க. எப்போதும் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்து வருவதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சி நீண்ட காலம் ஆட்சியில் இருந்தது. அவர்கள் நமது தலித் சகோதரர்களை மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி எப்போதும் தலித் மக்களை வாக்குகளை சேகரிக்கும் கருவியாகவே பார்த்தது.
சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் பயன்பெறும் வரை நாடு வளர்ச்சி அடையாது என்ற கருத்தியலை பா.ஜ.க. நம்புகிறது. காங்கிரஸ் கட்சியின் முழக்கங்கள் எப்போதுமே பிரிவினையை ஏற்படுத்தும். ஆனால் பா.ஜ.க. எப்போதும் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்து வருகிறது.
டாக்டர் அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கு நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது வரலாறு. அதேபோல், வடக்கு மும்பையில் அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடித்தது என்பதும் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அம்பேத்கர் வங்காளத்திற்குச் சென்று அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் மக்களவையில் அம்பேத்கரின் படத்தை வைக்க இடமில்லை. அவர் இறந்த பிறகும் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்படவில்லை. ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் தங்களுக்கு தாங்களே 'பாரத ரத்னா' விருது வழங்கிக் கொண்டனர். ஆனால் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கவில்லை. பா.ஜ.க. ஆதரவு பெற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்த பிறகுதான் அவருக்கு 'பாரத ரத்னா'விருது வழங்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியால் எப்போதும் தவறாக வழிநடத்தப்படும் தலித் சகோதரர்கள், தங்களை காங்கிரஸ் எப்போதும் ஒரு பொருட்டாக கருதவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தலித் மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களை கவனித்தவர் நரேந்திர மோடி மட்டுமே."
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.