< Back
தேசிய செய்திகள்
வாக்களித்த பின் பிரதமர் மோடி மேற்கொண்ட நடைபயணம்; காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்
தேசிய செய்திகள்

வாக்களித்த பின் பிரதமர் மோடி மேற்கொண்ட நடைபயணம்; காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்

தினத்தந்தி
|
5 Dec 2022 5:54 PM IST

வாக்களித்த பிறகு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா செய்த நடைபயணம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அகமதாபாத்,

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரும் அகமதாபாத்தில் உள்ள வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், குஜராத் மக்களால் ஜனநாயக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பெருமை, சிறப்பு ஆகியவற்றையெல்லாம் அதிகப்படுத்தும் வண்ணம் இந்த தேர்தலில் பெருமளவில் பங்கெடுத்துக்கொண்டு வாக்களித்து வருகிறார்கள். ஜனநாயக கடமையாற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில் குஜராத் சட்டமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரும் வாக்களித்த பின் நடைபயணம் மேற்கொண்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி வாக்களிக்கச் சென்றபோது, இரண்டரை மணி நேரம் ரோட்ஷோ (roadshow) செய்துள்ளார். அதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வேன். மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக கோஷமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஜராத் எம்.பி ஒருவருடன் காணப்பட்டார்.

நேற்று, எங்கள் கட்சியின் பழங்குடியினர் தலைவரும், தண்டாவின் எம்.எல்.ஏவுமான கந்தி பாதுகாப்பு கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். ஆனால் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை, அவரை பாஜகவைச் சேர்ந்த 24 பேர் தாக்கியுள்ளனர். குஜ்ஜில் மதுபானம் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் பாஜக மதுவை விநியோகித்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்