"காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை.." - பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
|சித்தாந்த முன்னோர்களை கொண்டவர்களுக்கு காந்தியின் உலகளாவிய தாக்கம் பற்றி தவறாக அறிந்திருப்பதில் ஆச்சரியமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மகாத்மா காந்தி பற்றிய சினிமாவை பார்த்த பின்னர்தான் காந்தி பற்றியே அறிந்து கொள்ளமுடிகிறது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில், காந்தியின் படுகொலைக்கு உடந்தையாக இருந்த சித்தாந்த முன்னோர்களை கொண்டவர்களுக்கு காந்தியின் உலகளாவிய தாக்கம் பற்றி தவறாக அறிந்திருப்பதில் ஆச்சரியமளிக்கவில்லை என பதிவிட்டு இருந்தார்.
ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி படத்தை எடுக்கும் வரை மகாத்மா காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை என்ற பிரதமரின் கருத்து திகைப்பூட்டுவதாக முன்னாள் மத்திய மந்திரியும், மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் தனது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.