< Back
தேசிய செய்திகள்
அவசர சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு; எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பு
தேசிய செய்திகள்

அவசர சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு; எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பு

தினத்தந்தி
|
16 July 2023 6:36 PM IST

டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் வெளிப்படுத்திய நிலையில், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ள 24 கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதில், கட்சிகளுக்கு இடையே விரிவான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான விசயங்களில் கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

கூட்டத்தில் ம.தி.மு.க., கொ.தே.ம.க., வி.சி.க., புரட்சிகர சமூகவாத கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய எட்டு புதிய கட்சிகள் கலந்து கொள்ள கூடும் என கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்து உள்ளார். இதற்கு முன்பு ஜூலை 13-ல் இந்த கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் பிரிந்து சென்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தது கட்சியில் குழப்பம் ஏற்படுத்தியது. இதனால், இந்த கூட்டம் 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்த ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்போம் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி நேற்று உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில், கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பங்கேற்பாரா? என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக தெரியாமல் இருந்து வந்தது. டெல்லி அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

எனினும், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தொடக்கத்தில் வெளிப்படுத்தவில்லை. இதனால், பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால் பங்கேற்பது பற்றிய கேள்வி எழுந்தது.

அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதனால் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க போவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. மத்திய அரசின் அவசர சட்ட மசோதாவை நாங்கள் எதிர்ப்போம் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யான ராகவ் சத்தா இன்று கூறும்போது, டெல்லி அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை இன்று தெளிவுப்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து, வருகிற 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி இணையும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்